Thursday, December 20, 2012

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு பொதுப் பிரச்சினையாக முன்வைக்க வேண்டும் - பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்


பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவன்றி ஒரு பொதுப் பிரச்சினை என்ற வடிவில் முன்வைக்க வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். கடந்த 12.12.12 ல் மீள்பார்வை ஊடக மையம் கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் 'இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் முஸ்லிம் கவுன்ஸில் ஒஃப் ஸ்ரீலங்கா தலைவர் என்.எம் அமீன், ராபிதா நளீமீய்யீன் அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன் ஆகியோரும் உரையாற்றினர். இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உரையாற்றிய என்.எம் அமீன் அவற்றை வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றப் பிரச்சினை, தெற்கு முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து வந்த சூழ்நிலைகள் மாறிப்போயுள்ள நிலை, கல்வி பிரச்சினை, வர்த்தகப் பிரச்சினை என வகைப்படுத்தி விளக்கி, அண்மைய நகர்வுகளையும் குறிப்பிட்டார்.


முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அணுகுவதற்கான வழிமுறைகள் குறித்து உரையாற்றிய பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், அவற்றை சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சிறுபான்மை மீதான பிரச்சினை என்ற வகையில் முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அடிமட்டத்திலிருந்து ஷூறா அமைப்புக்களை உருவாக்கி செயற்பட வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்ட கலாநிதி இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன், இலங்கையில் வாழும் பெரும்பான்மையான சிங்களவர்கள் நல்லவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment